சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது.

"எழுதல்", "நெருங்கிச் செல்லுதல்" "அச்சூழலைவிட்டு புறப்படுதல்" என்ற மூன்று செயல்பாடுகளில் கிறிஸ்தவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் பண்புகளைப் புரிந்துகொள்ளலாம். ஸ்தேவானின் மறைசாட்சிய மரணம் உருவாக்கிய இன்னல்கள், திருத்தூதர்களையும், சீடர்களையும், அவர்களுக்குப் பழக்கமானச் சூழலுக்கு அப்பால் செல்வதற்குத் தூண்டின. எந்த இடத்திற்கு நாம் செல்லவேண்டும், எத்தனை மக்களுக்குப் போதிக்கவேண்டும் என்று திட்டமிடுவது, நற்செய்தி அறிவிப்புப் பணி அல்ல, மாறாக, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்றவாறு பணியாற்றுவதே, உண்மையான நற்செய்தி அறிவிப்புப் பணி.


அருட்சுடர்

கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

கடவுள் உங்கள் முன்னால் தோன்றி உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் தருகிறேன் என்று சொன்னால் என்ன கேட்பீர்கள்? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார். ஒரு மாணவன் எழுந்து நான் நிறையப் பணம் கேட்பேன் என்றான். ஆசிரியர் அவனிடம் நானா யிருந்தால் அறிவைக் கேட்பேன் என்று சொன்னார். அப்போது மாணவன் கூறினான் யார் யாருக்கு எது இல்லையோ அதைத்தான் கேட்பார்கள். ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் நீங்கள் ஆண்டவரிடம் எதைக் கேட்கப் போகிறீர்கள். கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

நமது நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவோம்.

பேரின்பத்திற்கு ஒரே வழி.

நிரப்ப முடியாத அளவிற்கு நமது வாழ்வில் உள்ள பள்ளத்தாக்குகள் நம்மை அல்லும் பகலும் ஆட்டிப்படைக்கின்ற பேராசைகள் ஆகும். ஆடையின்றிப் பிறந்த நாம் ஆசையின்றிப் பிறக்கவில்லை. நமது கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள் குடிகொண்டுள்ளன.

நாம் சொறி, சிரங்கு பிடித்த மனிதர் போன்றவர்கள். சொறியும்போது சுகமாக இருக்கும், ஆனால் சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகும். நமது ஆசைகளுக்குத் தீனி போடப் போட அவை பன்மடங்கு கொழுந்து விட்டு எரியும். தணிக்க முடியாத, நிரப்ப முடியாத ஆசைகளை அடக்குவதே பேரின்பத்திற்கு ஒரே வழி.

பெண்கள் தம்மைக் குறைவாக மதிப்பீடு செய்துஏன்?

நீதிமொழிகள் 31:10-13 இல் என்ன வாசிக்கிறோம்?

பெண்கள் தம்மைக் குறைவாக மதிப்பீடு செய்து தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். “நான் மயிலாகப் பிறந்திருந்தால் ஆடியிருப்பேன், குயிலாகப் பிறந்திருந்தால் பாடியிருப்பேன், ஆனால் நான் பெண்ணாகப் பிறந்துவிட்டேன்: என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் ஓர் இளம் பெண். ஆனால் திருமறையில் நீதி மொழிகள் 31:10-13 இல் என்ன வாசிக்கிறோம்? வேதாகமத்தைத் திறந்து வாசித்துப் பாருங்களேன்!!

எம்மைக்குறித்து பரலோகம் பெருமை கொள்ளும்

காயப்பட்டுக் கிடக்கும் மனிதர்களில் நாம் கிறிஸ்துவின் உடைந்துபோன உடலைப் பார்க்க வேண்டும். எதிரிகளை வீழ்த்தி அரசருக்குரிய மணிமுடிக்குத் தகுதியை ஏற்படுத்திக்கொள்வது உலக மன்னர்களின் வாடிக்கை. ஆனால் வீழ்த்தப்பட்ட மாந்தருடன் தம்மை இணைத்துக்கொண்டு இயேசுவின் ஆட்சியில் இணைந்திட தகுதியை ஏற்படுத்துவது நற்செய்தி விடுக்கும் அறைகூவல். ஏனெனில் நம் ஆண்டவர் இயேசு அகில உலகிற்கும் அரசர் என்றாலும் இவ்வுலகில் அவர் ஏற்றுக்கொண்ட மணிமுடியானது மாந்தரின் மீட்புக்கான முட்களாலான முடியாகும்.

இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும்போது அவரின் பாடுகளையும் நினைவில் கொண்டு பிறர் உயர நாம் வாழ்ந்தால் எம்மைக்குறித்து பரலோகம் பெருமை கொள்ளும் என்பதே உண்மை.

ஆண்டின் இறுதி மாதத்தில் எமது கணக்கு என்ன?

ஓவியஆசிரியர் மாணவர்களிடம் மாடு புல் மேய்வதுபோல் படம் வரையச் சொன்னார். அவ்வாறே மாணவர்கள் படம் வரைந்து காட்டினார்கள். ஆனால் ஒரு மாணவன் மட்டும் வெறும் பேப்பரை ஆசிரியரிடம் கொடுத்தான். ஆசிரியர் கோபத்துடன் அவனிடம், மாடு எங்கே? என்று கேட்டதற்கு, மாடு மேயப் போயிட்டு சார் என்றான். புல் எங்கே என்று கேட்டதற்கு, மாடு மேய்ந்து விட்டது என்றான். வடிகட்டிய முட்டாள்! குடைந்தெடுத்த சோம்பேறி என திட்டினார் ஆசிரியர்.

ஆண்டின் இறுதி மாதத்தில் இருக்கும் நம்மிடமும் கடவுள் கணக்குக் கேட்க இருக்;கிறார். நாம், கடவுள் நமக்குக் கொடுத்துள்ள திறமைகளை வளர்த்துள்ளோமா? புனித பேதுரு கூறுகிறார், “தாம் பெற்றுக் கொண்ட அருள் கொடைகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்”(1பேது. 4:10-11).

கிறிஸ்து பிறப்பு விழாவில் ஒரு படி உயர நிற்போமே!

அவரை அவராகவே ஏற்றுக்கொண்டால் அதாவது அவர்களின் நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டால் ஒருவரோடு வாழ்வது எளிதாக இருக்கும். ஒருவரின் குறைகளை மட்டும் பார்த்தீர்கள் என்றால், அவர்களின் நிறைவுகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். குறையையா? அல்லது நிறைவையா? எதைப் பெரிதாகப் பார்க்கப்போகிறீர்கள்? குறையில்லாத மனிதர் யாரும் இல்லை. ஒருவரில் குறையைத் தவிர்த்து நிறைவைக் காண்பவர் மற்றவரைவிட ஒருபடி உயர நிற்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவில் ஒரு படி உயர நிற்போமே!

மன்னிப்பு என்னும் மலரை நத்தார் பரிசாகக் கொடுப்போம்.

மனக்கசப்பு வளர்ந்தால் உடலிலும், உணர்விலும் பல பாதிப்புகள் தோன்றிவிடுகின்றன. உதாரணத்திற்கு, மனச்சோர்வு, உயர் இரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் தோன்றுகின்றன என வல்லுனர்கள் கூறுகின்றார்கள். எனவே குடும்பவாழ்வில் ஒற்றுமை வளர, உடலில் நல்ஆரோக்கியம் தோன்ற மன்னிப்பு என்னும் மலரை நத்தார் பரிசாகக் கொடுப்போம்.

எடுத்த படம் ஓடவில்லை

நல்ல பாம்பு ஒன்று வாட்டத்துடன் வழியில் படுத்திருந்தது. ஏன்? என்று கேட்டதற்கு நான் எடுத்த படம் ஓடவில்லை என்றது? திரைப்படம் ஓடவில்லை என்றால் அதை எடுத்தவர் வாடிப்போய்விடுகின்றார்.

நமது வாழ்விலும் எமது விருப்பம் நிறைவேறவில்லை என்றால் சோர்ந்து போய்விடுகின்றோம். சோர்ந்து போனவர்களையும், களைத்துப் போனவர்களையும் வாழ வைக்கவே ‘சுமைசுமந்து சோர்ந்து போனவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இழைப்பாறுதல் தருவேன்’ என அழைக்கின்றார் இயேசு. இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் அவரிடம் வருவோம். அவரே வாழ்வு, வழி, உண்மை!

இலைகள் விழுந்தால் என்ன?

அது இலையுதிர் காலம். அந்த புல்வெளியில் மரம் மொட்டையாய் நின்றது. அந்த இடத்தில் புல்மேய்ந்த மாடு ஒன்று, அந்த மரத்திடம், உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன, உன்னைப் பார்த்தால் அழவேண்டும்போல் இருக்கிறது... என்று தழுதழுத்த குரலில் கூறியது. அதற்கு மரம், நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும் என்று சொல்லி நிமிர்ந்து நின்றது. தொடர்ந்து மரம் சொன்னது – விழுவதெல்லாம் அழுவதற்கில்லை என்று. (நன்றி காசி ஆனந்தன் கதைகள்).

இலைகள் விழுந்தால் என்ன? வேர்கள் இருக்கின்றனவே. எப்பொழுதும் வேர்களைத் தேடிச்செல்வோம்

முள் மலராக வேண்டும், தேள் தேனாக வேண்டும்

மண் பொன்னாக வேண்டும், நோயாளிகளுக்கு

உடல் நலம் வேண்டும், பாவிகளுக்கு

பாவ மன்னிப்பு வேண்டும்

இறந்தவர்களுக்கு, உயிர்ப்பு வேண்டும்

அறிவுக்குத் தெளிவு வேண்டும்

உள்ளத்திற்கு உறுதி வேண்டும்

வாழ்க்கைக்கு வழி வேண்டும்

இயேசுவின் பிறப்பால் உன்கனவு நனவாகும்

என்கிறார் ஏசாயா (ஏசா.35:1-6)

Thank you for contacting us. We will get back to you as soon as possible
Oops. An error occurred.
Click here to try again.